வெள்ளி, 16 அக்டோபர், 2009

திருக்குர்ஆன் அழைக்கிறது

M.S. Rahmathullah
பூமியில் அவன் படைத்திருப்பதில் பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையும் இருக்கிறது, நிச்சயமாக இதில் (அல்லாஹ்வை) நினைவு கூரும் மக்களுக்கு அத்தாட்சியுள்ளது.
உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான். இன்னும் நீங்கள் சரியான வழியை அறிவதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் அமைத்தான். இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான். அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (திருக்குர்ஆன்-16:12,13,15)
இன்னும், அல்லாஹ் கூறுகின்றான் இரண்டு (மூன்று) தெய்வங்களை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். நிச்சயமாக (உங்கள் இறைவன்) அவன் ஒரே ஒரு இறைவன்தான்! என்னையே நீங்கள் அஞ்சுங்கள். (திருக்குர்ஆன்-16:51)
இப்பூமி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம். இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான முகடாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள். இன்னும் அவனே இரவையும், பகலையும். சூரியனையும், சந்திரனையும் படைத்தான். (வானில்) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்திச்செல்கின்றன. (திருக்குர்ஆன்-21:31,32,33)
நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீங்கள் அறியவில்லையா? (திருக்குர்ஆன்.2:107)
அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை நிச்சயமாக அல்லாஹ் - அவன் யாவரையும் மிகைத்தோன் மிக்க ஞானமுடையோன். (திருக்குர்ஆன்3:62)
மேலும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
இரவிலும் பகலிலும், நீங்கள்உறங்குவதும் அவன் அருளை நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன். 30:20,22,23)
மேலும், உங்கள் இறைவன் ஒரே ஒருவன்தான். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:163)
பூமியில் விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா? (திருக்குர்ஆன் 56:63 ,64)
மேலும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகின்றோமா? (திருக்குர்ஆன் 56: 68 69)
நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?(திருக்குர்ஆன்56:71 72)
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை (திருக்குர்ஆன் 59:23)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக