அன்பே உருவான அம்மா…! – பாகம் – 2
ஹேம்குமார் அகர்வால்
இறையொளியால் என் உள்ளம் நிறைந்து இருக்கிறது. என் அம்மா!
நான் உங்கள் மகன். நான் இஸ்லாத்தை ஏற்குமுன், இஸ்லாமியப் பாதையிலான பயணத்தை ஆரம்பிக்குமுன், எத்தகைய கெட்ட செயல்களை உடையவனாக இருந்தேன் என்பது நீங்கள் அறியாதது அல்ல. திருடுவது, பொய் சொல்வது போன்றவை அப்போது எனக்கு மிகச் சிறிய விஷயங்கள். எந்தக் கணமும் இத்தகைய தீமைகளில் மிக தைரியமாக ஈடுபட பின் வாங்கியது இல்லையே! அந்த அளவுக்கு தீய எண்ணங்கள் என் உள்ளத்தை ஆக்கிரமித்து இருந்தன. என்னுடைய தரங்கெட்ட வார்த்தைகள், தமாஷ்கள், நிந்தனைகள் எத்தனை பேரின் கண்களில் நீர் மல்கச் செய்திருக்கும்?
ஆனால் இன்று, இப்படி ஒரு தீர்மானம் எடுத்ததன் பின்பு, இஸ்லாத்தை என் வாழ்வோடு ஒன்றிவிட்ட மார்க்கமாக ஏற்றதற்குப் பின்னர், இறையொளியால் என் உள்ளம் நிறைந்து காணப்படுகிறது. பாவ இருள்கள் முற்றாக நீங்கி விட்டுள்ளன.
என்னைப் படைத்த நாயன் ‘இவை கெட்டவை’ எனத் தடுத்தவற்றை நான் எப்படியம்மா தைரியமாகச் செய்ய முடியும்? அது அவனுடைய கூற்றைப் புறக்கணிக்கும் கொடிய குற்றமல்லவா?
அன்புள்ள என் அம்மா!
நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறைக்குப் பெயர் இஸ்லாம். அது முழு மனித சமுதாயத்திற்கும் அல்லாஹ்வால் அருளப் பெற்றது. அதில் எத்தகைய குறையும் இலலை. மனிதனின் முழு வாழ்வுக்கும் அவசியமான அத்தனை சட்டதிட்டங்களும் அதில் அடங்கியுள்ளன.
ஒரு மனிதன்எப்படி வாழ்வது
எப்படி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது
மற்றவர்களுடன் நெருங்கிப் பழகும் பொழுது ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது.
அரசியலில் எவ்வாறு ஈடுபடுவது
ஓர் ஆட்சியை எவ்வாறு நடத்திச் செல்வது
வாழ்வில் எத்தகைய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது.
எவ்வாறு உண்பது, உழைப்பது, திருமணம் புரிவது
இவை போன்ற எல்லா விஷயங்களிலும் இஸ்லாம் முன் வைக்கும் இறையாணைகள் பொருத்தமான வழிவகைகளை நமக்குக் காட்டித் தருகின்றன.
இன்னும் கேளுங்கள் அம்மா!
இஸ்லாம், மனிதர்கள் தமது பெற்றோர், சகோதர சகோதரிகள், கணவன், மனைவி, அயல்வீட்டார், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றுமுள்ளோருடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பதையும் சொல்லித் தருகின்றது. நபி (ஸல்) அவர்கள் நடந்து காண்பித்து விட்டுச் சென்றார்கள்.
நான் இப்பொழுது வல்லமையும், அன்பும், கருணையும் உடைய அல்லாஹ்வின் ஆணைகளை சிரமேற்கொண்டு, அவன் விருப்பப்படி வாழ திடசங்கற்பம் பூண்டுள்ளேன். அந்த வகையில், பெற்றோருடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றிய அவனது வழிகாட்டல் என்ன என அறிய விழைந்து, அவற்றிற்கு அமைய நடந்து கொள்கிறேன்.
அல்லாஹ்வும், அவனது இறுதித் தூதர் (ஸல்) அவர்களும், பெற்றோருடன் எவ்வாறு நடந்து கொள்வது? அவர்களுக்கு எவ்வாறு மரியாதை செய்வது என்பன பற்றி என்ன மொழிந்துள்ளனர் என உங்களுக்குத் தெளிவுபடுத்த விழைகின்றேன்.
வல்லமைமிக்க அல்லாஹ் தனது பரிசுத்த குர்ஆனில் பெற்றோருக்குப் பணிந்து நடப்பது பற்றி பெருமளவு குறிப்பிட்டுள்ளான்.
‘பெற்றோருடன் பேணுதலாக நடந்து கொள்ளுங்கள், அவர்களைத் துன்புறுத்தாதீர்கள், அவர்கள் கூறுபவற்றை மிக்க மரியாதையுடன் செவிமடுங்கள், அவர்கள் செய்த உதவிகளுக்கு நன்றி செலுத்துங்கள் என்பன அவற்றுள் சில.
முஹம்மத் (ஸல்) அவர்கள் பெற்றோருக்குக் கண்ணியம் அளிப்பது பற்றி மொழிந்தவை இவ்விறை போதனைகளுக்கு முற்றிலும் இணக்கமானவை.
ஒருமுறை, ஒருவர் வந்து, ‘யா ரசூலுல்லாஹ்! அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல் எது?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவினார்.
‘உரிய வேளையில் தொழுவது’ என நபி (ஸல்) அவர்கள் பதில் மொழிந்தார்கள்.
‘அதற்கு அடுத்த, அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல் எது?’ என மீண்டும் அவர் வினவினார்.
‘பெற்றோருடன் கண்ணியமாக நடந்து கொள்வது’ என அல்லாஹ்வின் தூதர் பதில் மொழிந்தார்கள்.
மற்றொரு முறை, வேறொருவர் வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, ‘யா ரசூலுல்லாஹ்! தாய் நாட்டையும் பிறந்தகத்தையும் விட்டுவிட்டு அல்லாஹ்வுக்காகப் புனிதப் போரில் ஈடுபடுவதாக உங்கள் கரங்களில் சத்தியம் செய்கிறேன். அதற்கான வெகுமதிகளை அவனிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்’ எனக் கூறினார்.
இதை நிதானமாக கேட்டுக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் மிக அமைதியாக, ‘உங்கள் பெற்றோர் இருக்கின்றனரா? எனக் கேட்டார்கள்.
அதற்கவர், ‘அல்லாஹ்வின் அருளால் அவ்விருவரும் நலமாக இருக்கின்றனர்’ என பதில் அளித்தார்.
‘அப்படியா? நீங்கள் அவர்களுக்குப் பணிவிடை செய்யுங்கள். அப்பணிவிடைகளாவன அல்லாஹ்வுக்காக ஹிஜ்ரத்தும், ஜிஹாதும் செய்த நன்மையை அவனிடமிருந்து பெற்றுத் தரும்’ என்பது ரசூல் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமாக இருந்தது.
நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்:
‘உங்கள் சுவனமும் நரகமும் உங்கள் பெற்றோரின் பாதத்தடியில் தான்!’ என்று.
இந்த நபி மொழியின் கருத்து இதுதான்:
தமது பெற்றோருக்கு அடிபணிந்து, அவர்களுக்குப் பணிவிடை புரிந்து, அவர்கள் செய்த உதவி ஒத்தாசைகளுக்கு நன்றி பகர்ந்து, அவர்களுக்கு நல்லன செய்தால் சுவனம் கிட்டும். அவ்வாறின்றி, அவர்களைத் துன்புறுத்தி, தொல்லைகள் பல கொடுத்து வாழும் ஒருவர், நரகில் கொழுந்து விட்டெரியும் நெருப்புக்கு இரையாவார் என்பதாகும்.
பிள்ளைகள் தம் பெற்றோருடன் மிக நல்ல விதமாக நடந்து கொள்ளல் வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பல கட்டங்களில் மொழிந்துள்ளார்கள்.
அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
‘அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை (‘உஃப்’) சீ என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம்’. (அல்குர்ஆன் 17:23)
தொடரும்...
நன்றி:இஸ்லாமியதாவா.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக