மனிதனுக்கேற்ற மார்க்கம்
الإسلام دين الإنسانية
மௌலவியா எம். வை. மஸிய்யா B.A (Hans)
இன்று உலகில் 180 கோடிக்கும் அதிகமான மக்களால் இஸ்லாம் மார்க்கம் பின்பற்றப்படுகின்றது. இஸ்லாம் மார்க்கம் எந்த வகையில் ஏனைய மதங்களிலிருந்து வேறுபட்டிருக்கின்றது? இஸ்லாம் என்றால் என்ன? அதன் அடிப்படைக் கொள்கை என்ன? என்பனவற்றையெல்லாம் அறிந்துகொள்ள நாம் கடமைப் பட்டுள்ளோம்.
இஸ்லாம் இரு அடிப்படைகளை உலகத்திற்குச் சொல்கிறது.
1. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
2. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய திருத் தூதராவார்கள்.
ஒருவன், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்பிக்கை கொள்ளும்போது, அவனிடம் மொழியால், இனத்தால், நிறத்தால், தேசத்தால் இருந்த பிளவுகள், கோத்திரத்தின், குலத்தின் அடிப்படையில் அவன் ஏற்படுத்திக்கொண்ட பிளவுகள் எல்லாமே இந்த ஓரிறைக் கொள்கையால் அடிபட்டுப் போகின்றன.
இவ்விரு கொள்கைகள்தான் இஸ்லாத்தின் அடிப்படைகளாகும். ஒருவன் இவற்றை நம்புகின்ற காரணத்தினால் ஏனைய மார்க்கங்களில் இருந்து தனித்தவனாக, வித்தியாசமான ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டவனாக மாறுகின்றான். அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவனுடைய வாழ்க்கையிலே ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இது போக, இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இன்று உலகத்தில் உள்ள எல்லா மதங்களையும், மார்க்கங்களையும் எடுத்துப் பார்த்தால் ஏதோ ஒரு வகையில் அங்கு பல தெய்வ வணக்கம் குடி கொண்டிருப்பதைப் பார்க்கலாம். பல தெய்வ வணக்கம் என்பது பல தெய்வங்களை வணங்குவது மட்டுமல்ல, உயிரோடுள்ளவர்களை வணங்குவது, இறந்தவர்களை வணங்குவது, பொருட்களை வணங்குவது போன்ற அனைத்துமாகும். இப்படி எல்லாம் நடப்பதை இன்றைய அறிவியல் உலகிற் பார்க்கிறோம்.
தெளிவாகவே பல கடவுட் கொள்கையைப் பிரகடனம் செய்யும் மார்க்கங்களையும் பார்க்கிறோம். படைப்பதற்கு ஒருவன், காப்பதற்கு ஒருவன், அழிப்பதற்கு ஒருவன், வேறு தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஒருவன் என்றெல்லாம் கடவுளைக் கூறு போடக்கூடிய மார்க்கங்களையும் மதங்களையும் நாம் உலகில் காண்கிறோம்.
ஆனால், இஸ்லாம் இவற்றிற்கெல்லாம் முற்றிலும் மாறுபட்டு அடிப்படையிலே மொத்த உலகத்திற்கும் கடவுள் ஒருவன்தான் என்றும் எல்லா மக்களுக்கும் ஒரே கடவுள்தான் இருக்க முடியும் என்றும், பல கடவுளர் இருக்க முடியாதென்றும் சொல்லித் தருகின்றது. அல்லாஹ் கூறுகிறான், இந்த உலகத்திலே ஒரு கடவுளைத் தவிர இன்னும் கொஞ்சம் கடவுளர் இருந்தால், இந்த உலகம் என்றைக்கோ சீர் கெட்டுப் போயிருக்கும்.
இத்தகைய வேறுபாடுகள் ஒழிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? எப்படி இந்த வேறுபாடுகள் ஒழியும்? இத்தகைய வேறுபாடுகள் ஒழிவதற்காக உலகத்தில் இதுவரை தீட்டப்பட்டு வந்துள்ள திட்டங்கள் வெற்றி அடைந்திருக்கின்றனவா எனில் நிச்சயமாக இல்லை. இத்தகைய வேறுபாடுகள் ஒழிய வேண்டுமானால் மனிதன் தான் கடவுளுக்கு அடிமை என்பதை முதலில் உணரவும் ஒப்புக் கொள்ளவும் வேண்டும். அடிமை என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒருவன், தான் இன்னொருவனைவிடச் சிறந்தவன் என்று சொல்ல மாட்டான், சொல்லவும் முடியாது. எனவே, மக்களனைவரும் சமமானவர்கள் என்ற எண்ணத்தை இந்தக் கொள்கைப் பிரகடனம் ஏற்படுத்துகின்றது. இதைத்தான் அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது,
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَى
'மனிதர்களே, நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்' (அல்ஹுஜுராத்: 13).
கடவுளுக்கு அண்ணன், தாய், தந்தை போன்ற உறவுமுறைகள் எதுவும் இருக்கக் கூடாது. ஓரிறைக் கொள்கையில் இதற்கு இடமே யில்லை. திருமறை குர்ஆனில் கடவுளென்பவன் யாரையும் பெறவுமில்லை, யாராலும் பெறப்படவுமில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீங்கள் யாரைக் கடவுளர் என்று நம்புகிறீர்களோ அந்தக் கடவுள் யாருக்காவது பிறந்தாரெனில் உங்களுடைய கடவுட் கொள்கையில் உங்களுக்கொரு முரணபாடு ஏற்படுகின்றது. அது என்னவென்றால், நீங்கள் கடவுளென்று சொல்கிறீர்கள், கடவுள்தான் அனைத்தையும் படைத்தான் என்றும் சொல்கிறீர்கள். அந்தக் கடவுளே கொஞ்ச காலத்திற்கு முன் இல்லாமலிருந்திருக்கிறார். அவர் யாருக்கோ பிறந்தார் என்றால், அவர் பிறப்பதற்கு முன்புள்ள காலகட்டத்தில் கடவுளென்று ஒருவனில்லை என்றாகிவிடுகிறது. அதாவது, கடவுளுக்கு முன்பே கடவுளின் பெற்றோர்கள் உலகத்தில் இருந்திருக்கிறார்கள் என்று பொருள்படுகிறது.
கடவுளுடைய தாயும் தந்தையும் கடவுளுக்கு முன்பே உலகில் இருந்திருந்தால் அவர்கள்தான் கடவுளராக இருப்பதற்குத் தகுதி பெற்றவர்களே தவிர இல்லாதவனாக இருந்து மனிதர்களின் உடற் சேர்க்கையினாற் பிறந்தவர் எப்படிக் கடவுளாக முடியும்? எனவேதான், திருமறை குர்ஆன் உங்களைப் படைத்த, நீங்கள் வணங்கக் கூடிய ஒரே கடவுளான அல்லாஹ்வுக்குச் சந்ததி கிடையாது, அவனுக்குத் தாய், தகப்பனும் கிடையாது என்று கூறுகிறது.
கடவுளை வைத்துத்தான் மதங்கள் உருவாயின. ஆகவே, கடவுளைப் பற்றிச் சொல்லவில்லையென்றால் அவை மதங்களாகவே அழைக்கப்பட முடியாது. இன்று கடவுளைப் பற்றிக் கூறுகின்ற மார்க்கங்களை எடுத்துப் பார்த்தால் அவை அவற்றின் கடவுளருடைய ஏதோவொரு பலவீனத்தைச் சுட்டி நிற்கிறது. கடவுளுக்குச் சோர்வு, அசதி, மனைவி, சந்ததி – இப்படியெல்லாம் சொல்லக் கூடிய எல்லாச் சித்தாந்தங்களையும் இஸ்லாம் மறுத்துரைக்கிறது. எல்லா நேரத்திலும் அவன் காரியத்திலேயே இருந்து கொண்டிருக்கிறான் என்று திருக் குர்ஆன் சொல்கிறது.
இவ்வாறு சிறந்த ஒரு கடவுட் கொள்கையை இஸ்லாம் உலகத்திற்கு எடுத்துச் சொல்கிறது. மேற்படி இஸ்லாத்தின் கடவுட் கொள்கையை நம்புகின்ற ஒருவன் அதன் உள்ளடக்கமான இன்னுமொரு அம்சத்தையும் நம்ப வேண்டும். அதாவது, நாம் வாழக்கூடிய உலகம் ஒரு நாளில் அழிக்கப்படும். பின்னர் இந்த மொத்த உலகத்தையும் அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்புவான். பின்னர் படைப்பினங்கள், அவற்றின் செயல்களுக்காக விசாரணை செய்யப்பட்டு, அவற்றில் நல்லறஞ் செய்த மனிதனுக்கு அல்லாஹ் வெகுமதிகளைக் கொடுப்பான். தீய செயல்களைப் புரிந்தவனை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான். எனவே, மரணத்திற்குப் பின்னர் இது போன்றதொரு வாழ்க்கை இருக்கிறது என்று நாம் நம்ப வேண்டும்.
இஸ்லாத்தைப் பற்றிச் சொல்லப்படுகின்ற எல்லா விதமான விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் அறிவுபூர்வமான விளக்கமிருக்கிறது. அவற்றுக்கு அறிவுபூர்வமாக, அறிவுக்குப் பொருத்தமான முறையில் பதில் சொல்கிறது இஸ்லாம். இஸ்லாம் என்பது இன்றைய உலகத்திற்குத் தேவையான உலகத்திலுள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும், எல்லா விவகாரங்களுக்கும் சரியான பரிகாரம் சொல்லக்கூடிய ஒரே மார்க்கமாக இருக்கிறது. இதனாற்றான், இன்று உலகில் வாழும் 180 கோடிக்கும் அதிகமான மக்களை அது கவர்ந்திருக்கிறது. இது போன்றதொரு மார்க்கத்தைப் புரிந்து பின்பற்றக்கூடிய பாக்கியம் நம்மனைவருக்கும் கிடைக்கட்டுமாக!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பதிலளிநீக்குஅல்ஹம்துலில்லாஹ்! நல்லதோரு ஆக்கம். சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உள்ள வித்தியாசத்தை பிரிதறிவித்து தெளிவுப்படுத்தி இருக்கிறீர்கள்;
நான் முஸ்லிம் தளத்திலும் அப்படி ஓரிரு கடவுள் குறித்த ஆக்கங்கள் இட்டிருக்கின்றேன். வாய்ப்பு இருந்தால் இன்ஷா அல்லாஹ் பார்வையிட்டு உங்கள் கருத்துக்களையும் - ஆலோசனைகளையும் சொல்லுங்கள்