வணங்கத் தகுதியான இறைவன் யார் ?
Dr. Ahmad Baqavi PhD.
( அல்குர்ஆன் 27: 59-66 வசனங்களின் கருத்துரை)
புகழ் யாவும் இறைவனுக்கே உரியன. அவன் தேர்ந்தெடுத்த நல்லடியார்களுக்கு வெற்றி உண்டாவதாக!
அல்லாஹ் மேலானவனா? அல்லது மனிதர்கள் அவனுக்கு இணைவைத்து வணங்குபவை மேலானவையா?
வானங்களையும், பூமியையும் படைத்து மேகத்திலிருந்து உங்களுக்காக மழை பொழியச் செய்பவன் யார்?
அந்த மழையினால் கண்ணைக்கவரும் அழகிய தோட்டங்களை அல்லாஹ்வே உற்பத்திச் செய்கிறான்.
அவனது உதவியின்றி அவற்றின் மரங்களை முளைப்பிக்க உங்களால் முடியாது.
இவ்வாறிருக்க அல்லாஹ்வைத் தவிர்த்து இன்னொருவரை வணங்கலாமா? ஆனால், இவர்களோ தங்களின்
கற்பனையான தெய்வங்களை அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்விற்கு இணையாக வணங்குகின்றனர்.
பூமியை உறுதிமிக்க தங்குமிடமாக அமைத்து அதன் மத்தியில் ஆறுகளையும், மலைகளையும் அமைத்தவன் யார்?
இருகடல்களுக்கிடையே தடுப்பை ஏற்படுத்தியவன் யார்?
இத்தகையை படைப்பாளனாகிய அல்லாஹ்வை தவிர்த்து இன்னொருவரை வணங்கலாமா? ஆனால், அவர்களில் பெரும்பாலோர் இதனை புரிந்து கொள்வதில்லை.
(துன்பத்தில் சிக்கித்) துடித்துக் கொண்டிருப்போர் அபயமிட்டு அழைத்தால் அவர்களுக்கு பதிலளித்து அவர்களின் துன்பங்களை துடைப்பவர் யார்? பூமியில் உங்களை பிரதிநிதிகளாக ஆக்குபவன் யார்?
இத்தகைய அல்லாஹ்வைத்தவிர்த்து இன்னொருவரை வணங்கலாமா? மக்களில் நல்லுணர்வு பெறுவோர் வெகுசிலரே!
கடலிலோ கரையிலோ இருள்களில் சிக்கித் தவிக்கும் உங்களுக்கு வழிகாடடிக் காப்பது யார்? அவனது அருள் மழை பொழியுமுன் குளிர்ந்த காற்றை நற்செய்தியாக அனுப்பி வைப்பவன் யார்?
இவற்றையெல்லாம் உங்களுக்காகச் செய்யும் அல்லாஹ்வைத் தவிர்த்து இன்னொருவரை வணங்கலாமா? மக்கள் இணைவைக்கும் கற்பனைக் கடவுள்களைவிட்டும் அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்.
துவக்கத்தில் படைப்புகளை எவ்வித முன்மாதிரியுமின்றிப் படைத்து அவை அழிந்த பின்னர் மீண்டும் உருவாக்குபவன் யார்? மேகத்திலிருந்து மழையை இறக்கிப் பூமியில் தானியங்களை முளைக்கச் செய்து உங்களுக்கு உணவளிப்பவன் யார்?
இவற்றையெல்லாம் திட்மிட்டுச் செயலாற்றும் அல்லாஹ்வைத்தவிர்த்து இன்னொருவரை வணங்கலாமா? நீங்கள் செய்வது சரியானது என்றால் அவற்றை நிரூபிக்கும் ஆதாரங்களை கொண்டு வாருங்கள்.
வானங்களிலும் பூமியலும் மறைந்திருப்பவற்றையும், மரணித்தோர் எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர எவரும் அறிய மாட்டார்கள்.
மறுஉலக வாழ்வைப் பற்றி மக்கள் தவறாகவே புரிந்து வைத்துள்ளனர். அது குறித்து அவர்கள் பெரும் செந்தேகத்திலே உள்ளனர். அதுமட்டுமா? அவர்கள் (கருத்துக் ) குருடர்களாகவே இருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக